யாழினிசை தரும் எம் உயிரோசை ! இனி யாரும் இசை தர ‍இது முதல் மணியோசை !

யாழினிசை தரும் எம் உயிரோசை !

இனி யாரும் இசை தர ‍இது முதல் மணியோசை !


வெள்ளி, 3 ஏப்ரல், 2015

தெட்சணாமூர்த்தி ( Thedchanamoorthy )


யாழ் மண்ணின் கலைச்சிறப்பு மிக்க இணுவில் எனும் ஊரில் விசுவலிங்கம் என்னும் பெயருடைய தவில் வித்துவானுக்கும் அவர் மனைவி இரத்தினாம்பாளுக்கும் புத்திரனாக 1933 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 26 ஆம் நாள் ஞானபண்டிதன் எனும் பெயர் கொண்டு பிறந்தவர் தான் பிற்காலத்தில் தெட்சணாமூர்த்தி எனும் புகழ் பெற்ற தவில் கலைஞர் ஆவார்.

இவர் தனது முதற் குருவாக தன் தந்தையை தெரிவு செய்து கொண்டதுடன் அதன் பின் சகோதரியின் கணவனான கிரிஷ்ணமூர்த்தி என்பவரிடமும் தவில் பயின்றார்.  இவரின் ஏழாவது வயதில் வண்ணார் பண்ணை காமாட்சி சுந்தரம் பிள்ளையிடமும் ஆறு மாதங்கள் வரை பயிற்சி பெற்றார். அவரது சகோதரர்கள் ருத்ராபதி, கோதண்டபாணி ஆகியோர் நாதஸ்வரம் வாசிக்க காமாட்சி சுந்தரம் பிள்ளையுடன் சேர்ந்து இணுவில் மஞ்சத்தடி முருகன் ஆலயத்தில் தெற்கு வீதியில் இவரது அரங்கேற்றம் நடைபெற்றது.

அதன் பின்னர் நாச்சியார் கோயில் ராகவப்பிள்ளை என்னும் வித்துவானுடன் சேர்ந்து கொழும்பில் அவருக்கிணையாகத் தவில் வாசித்துத் தன் திறமையை நிலைநாட்டியதுடன் நின்றுவிடாது தன் பன்னிரண்டாவது வயதில் தென்னிந்தியாவுக்குச் சென்று ராகவப்பிள்ளையிடம் பயிற்சி பெற்று தன்னிகரற்ற மேதையானார். இந்தியாவின் நாதசுர மேதைகள் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், காரைக்குறிச்சி அருணாசலம்,சேக் சின்ன மௌலானா, டி.என். ராஜரத்தினம் பிள்ளை போன்றவர்களுக்கு வாசித்துப் பாராட்டும் பெற்றார். ஈழத்திலும் எம். பஞ்சாபிகேசன், பி.எஸ் ஆறுமுகம் பிள்ளை, என். கே பத்மநாதன் , திருநாவுக்கரசு போன்றோருக்கும் வாசித்த பெருமை அவருக்கு உண்டு. இவரது தவில் வாசிப்பு, யாவரும் வியக்கும் வண்ணமும், நாத சுகமுள்ளதாகவும், லய வேலைப்பாடுகள் நிறைந்ததாகவும் இருந்து வந்தது.

இவருடைய சாதனைகளை பார்ப்போமானால்,

  • இவருக்கு 'தங்கக் கோபுரம்' விருது சென்னையில் கிடைக்கப்பெற்றது. 
  • திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை அவர்களின் நினைவு விழாவில் தங்கத்தாலான தவிற்கேடயம் 1968 இல் வழங்கப்பட்டது. 
  • தவில் வாத்தியத்தில் முதன் முறையாக பதினொரு எண்ணிக்கை கொண்ட கதி ஒன்றை அமைத்து அதற்கு உத்தரகதி எனப் பெயர் வைத்தார்.

இவரது தந்தையார் காலமாக தனது மூத்த தமக்கையார் கணேசு இராஜேஸ்வரி வாழ்ந்த அளவெட்டியிலே சென்று குடியேறினார் தெட்சணாமூர்த்தி. அளவெட்டி தவிற்கலைஞர் செல்லத்துரைப்பிள்ளையின் மகளான மனோன்மணியைத் காதலித்து 1957ஆம் ஆண்டு திருமணம் புரிந்துகொண்டார். இவருக்கு கலாதேவி, உதயசங்கர், ரவிசங்கர், உதயசெல்வி, ஞானசங்கர் என ஐந்து பிள்ளைகளைப் உள்ளனர். இவர்களில் இருவர் தவில் பயின்றார்கள். உதயசங்கர் தந்தை வழியிலேயே தவில் பயின்று தற்பொழுது தவில் வாசிப்பதில் சிறந்து விளங்கி வருபவர். மற்றவர் ஞானசங்கர்.

வாழ்நாளின் பிற்பகுதியை இந்தியாவிலே செலவிட்டதுடன். 1970களில் இலங்கை வந்து 1978 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 13 ஆம் நாளில் காலமானார். அவர் மேல் பொறாமை கொண்ட சிலர் அவருக்கு நச்சு மருந்து கொடுத்து அதனால் அவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார் என்றும் எம்மூரில் கதை உண்டு.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

செல்லக்கனி வாயால்

பாடல் இயக்கம் : வீரமணி ஐயர்
ராகம்: பிருந்தாவன சாரங்கா
தாளம்: ஆதி
பாடலின் ஒலி வடிவம் கேட்க‌

செல்லக்கனி வாயால்
சொல்லடா கண்ணே
வெல்லம் என இனிக்கும்
வேலவனின் நாமம்
செல்லக்கனி வாயால்
சொல்லடா கண்ணே..

செல்வ குமரன் குகன்
செந்தில்பதி முருகன்
நல்லை கந்தன் உனக்கு 
நல்லதெல்லாம் ஈய்வான்
செல்லக்கனி வாயால்
சொல்லடா கண்ணே..


உள்ளம்தனை உருக்கும்
உந்தன் வினை கருக்கும்
கள்ளம் கபடம் இல்லா
கலை ஞானத்தை பெருக்கும்
மெல்ல குழைந்து வரும்
மேனியெல்லாம் சிலிர்க்கும்
அல்லல் தனை அகத்தும்
அருளும் நிறைந்திருக்கும்

செல்லக்கனி வாயால்
சொல்லடா கண்ணே
வெல்லம் என இனிக்கும்
வேலவனின் நாமம்
செல்லக்கனி வாயால்
சொல்லடா கண்ணே..

திங்கள், 29 ஜூலை, 2013

சின்ன வயதினில் நீ

பாடல் இயக்கம் : வீரமணி ஐயர்
குரல்: சுதா இரகுநாதன்
ராகம்: மாண்டு
தாளம்: ஆதி
                                                                   பாடலின் ஒலி வடிவம் கேட்க‌

சின்ன  வயதினில் நீ செய்த குரும்பையெல்லாம்
சிந்தனை செய்து பாரடா முருகா.. !
சின்ன  வயதினில் நீ செய்த குரும்பையெல்லாம்
சிந்தனை செய்து பாரடா முருகா.. !
முருகா... !

கன்னல் மொழி சிவன் காதில் உபதேசங்கள்
சொன்னதும் சொற்கேளாமல் சற்குரு ஆனதும்
சின்ன  வயதினில் நீ செய்த குரும்பையெல்லாம்
சிந்தனை செய்து பாரடா முருகா.. !
முருகா... !

மாங்கனி வாங்க அன்று மாமயில் மீதினிலே
மாநிலம் வலம் வந்து விண்ணிலே ஏமார்ந்தாய்
தீங்கடும் கோபம்கொண்டு ஆண்டியாய் வேடம் பூண்டு
தீநகையாபரனனே ஞானப்பழம்  வாங்கி
சின்ன  வயதினில் நீ செய்த குரும்பையெல்லாம்
சிந்தனை செய்து பாரடா முருகா.. !
முருகா... !

நாவல் மரத்திலிருந்து நாவில் சுடும்பழமோ
நாவில் சுடாத பழமோ நாடுவாய் என்றுரைக்க‌
ஆவல் மிகுந்த ஒளவை நாவல் பழம் எடுத்தூத‌
ஆனந்தமாக பாட்டி அதிகம் சுட்டதோ என்று
சின்ன  வயதினில் நீ செய்த குரும்பையெல்லாம்
சிந்தனை செய்து பாரடா முருகா.. !
முருகா... !

திங்கள், 22 ஜூலை, 2013

நாதம் கேட்குதடி..

 பாடல் இயக்கம் : வீரமணி ஐயர்

நாதம் கேட்குதடி…….நல்லூர் நாதம் கேட்குதடி….
நாதம் கேட்குதடி நல்லூர் நாதம் கேட்குதடி
நல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி
நல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி
கீதம் ஒலிக்குதடி…..கீதம் ஒலிக்குதடி…..
அன்பர் பாடி பரவி உவகை குதித்திடும்
கீதம் ஒலிக்குதடி……….
அன்பர் பாடி பரவி உவகை குதித்திடும்
கீதம் ஒலிக்குதடி……….
நாதம் கேட்குதடி ……….
நல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி
ஒலியின் அலைகள் விரவிச் செவியில்…….
ஒலியின் அலைகள் விரவிச் செவியில்
ஓம் முருகா………ஓம் முருகா…….ஓம் முருகா
ஒலியின் அலைகள் விரவிச் செவியில்
ஓம் முருகா என ஒலிக்குதடி
கலியுகத் தெய்வம் கந்தனென்றே மனம் கனிந்து
மெத்தாய் உருகுதடி
கலியுகத் தெய்வம் கந்தனென்றே மனம் கனிந்து
மெத்தாய் உருகுதடி
மலியும் கனிகள் குலுங்கும் நல்லையில்
மலியும் கனிகள் குலுங்கும் நல்லையில்
மால் மருகன் அருள் இருக்குதடி
மால் மருகன் அருள் இருக்குதடி
வலிவும் வனப்பும் வளமும் அருளும்
வடிவேலவன் புகழ் பாடியே
அடியார் தொழக் கவிபாடிடும்
வலிவும் வனப்பும் வளமும் அருளும்
வடிவேலவன் புகழ் பாடியே
அடியார் தொழக் கவிபாடிடும்
நாதம் கேட்குதடி…….நல்லூர் நாதம் கேட்குதடி….
நாதம் கேட்குதடி…… நல்லூர் நாதம் கேட்குதடி….
நாதம் கேட்குதடி…….நல்லூர் நாதம் கேட்குதடி….
நாதம் கேட்குதடி…… நல்லூர் நாதம் கேட்குதடி….

ஞாயிறு, 21 ஜூலை, 2013

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்




பாடல் இயக்கம் : வீரமணி ஐயர்
குரல்: TM சௌந்தரராஜன்
ராகம்: ராகமாலிகை (ஆனந்த பைரவி, கல்யாணி, பாகேஸ்ரீ, ரஞ்சனி)
தாளம்: ஆதி

கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா!(கற்பக வல்லி)

பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட
(கற்பக வல்லி)

நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்
நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ
ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா!
(கற்பக வல்லி)

எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும்
நல்லாசி வைத்திடும் நாயகியே நித்ய
கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த
உல்லாசியே உமாஉனை நம்பினேன் அம்மா!
(கற்பக வல்லி)

நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்
வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்
பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த
லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா!
(கற்பக வல்லி)

அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்
கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே உன்னிடம் - அருள்
தஞ்சம் என அடைந்தேன் தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா!
(கற்பக வல்லி)  

வீரமணி ஐயர்


ஈழத்து இசையை தனித்துவமாக இன்று கதைக்கின்றோமென்றால் இதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருப்பவர் வீரமணி ஐயர் எனும் இக்கலைஞர் தான். இவரது "கற்பகவல்லி நின் பொற்பதம்" என்ற பாடல் நம் ஈழத்து மக்களிடையே மட்டுமல்லாது உலகளவில் கொண்டிருக்கும் பிரபல்யமொன்றே இதனை சான்று பகர போதியதாகின்றது.

இவர் ம.த.நடராஜ ஐயர் க்கும் சுந்தராம்பாள் அம்மையாருக்கும் இரண்டாவது மகனாக 1931 அக்டோபர் 15 தமிழ்ப்பிரசித்தி பெற்ற இணுவில் கிராமத்தில் பிறந்தார்.

இவர் சிறுவயதுக் கல்வியை இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்திலும் (இன்றைய‌ இணுவில் இந்துக் கல்லூரி) உயர் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் கற்றார். கல்லூரி படிப்பை நிறைவு செய்துகொண்டு மேல் படிப்புக்காக இந்தியா சென்ற இடத்தில், இசை, நடனம், நாடகம் என்பனவற்றால் கவரப்பட்டு, திருமதி ருக்மணிதேவி அருண்டேலிடம் பரதநாட்டியமும், எம். டி. ராமநாதனிடம் இசையையும் கற்றுக்கொண்ட இவர், பாபநாசம் சிவன் அவர்களை தனது சாகித்ய குரு ஆக்கி கொண்டார்.

பின்னர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் விரிவுரையாளராக இணைந்துகொண்டு தனது இசைப்பணியை ஈழத்துக்கு ஆற்றத்தொடங்கினார். இவரது இப்பணியில் ஏராளமான இசை,நாட்டிய ஆசிரியர்களும், ஏராளமான சாகித்யங்கள், நாட்டிய நாடகங்கள், ஆலயங்கள் மீதான பாடல்களும் அடங்கும்.

இவரது படைப்புக்கள் :
  •  72 மேளகர்த்தா இராகங்களிற்குமான உருப்படிகள்
  • 175 தாளங்களிற்குமான உருப்படிகள்
  • சாகித்யங்கள்
    • கற்பகவல்லி நின் பொற்பதங்கள்
    • சின்ன வயதினிலே
    • சரஸ்வதி வீணை
    • தசாவதாரம்
    • என் முகம் பாராயோ சண்முகனே
    • ஏனடா முருகா
    • என்னடி பேச்சு சகியே
    • கஜமுகா
    • குஞ்சரன் சோதரா
    • குழல் ஊதி விளையாடி
    • மட்டுநகர்
    • நவரச நாயகி
    • சாரங்கன் மருகனே
    • வண்ண வண்ண
    • கற்பக விநாயகனே
    • தாமரை இதழிலே நாதம் கேட்குதடி
    • நயினையம்பதி
  • கீர்த்தனைகள்/பாடல்கள்
    • இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில்
    • இணுவில் கந்தசுவாமி கோயில்
    • நல்லூர் முருகன்
    • மாவிட்டபுரம் கந்தசாமி கோயில்
    • கோண்டாவில் சிவகாமியம்மன்
    • காரைநகர் திக்கரை முருகன்
    • சுட்டிபுரம் கண்ணகை அம்மன் 
  •  இசை நூல்கள்

இவரது பெற்ற பட்டங்களும் விருதுகளும்:
  • கர்நாடக இசை, நடனம் ஆகிய இரண்டிலும் டிப்ளோமா (Diploma in Dance & Music)
  • "சாகித்ய சாகரம்" பட்டம் - கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை
  • "கவிமாமணிபட்டம் - வட இலங்கை சங்கீத சபை
  • "இயலிசை வாரிதி" பட்டம்
  • "மகாவித்துவான்" பட்டம்   
  • "கௌரவ முதுமாணி" (எம்.ஏ) பட்டம்  - யாழ் பல்கலைக்கழகம்

செவ்வாய், 11 அக்டோபர், 2011

தாலாட்டுப்பாடல்

எம் நாட்டு  புலவர்கள்  பலர், பல  பொருள்களில் அமைந்த  தாலாட்டு பாடல்களை எழுதியிருந்த போதிலும், தாலாட்டு பாடல் என்று சொன்னதும் எமக்கு ஞாபகம் வருவது எமது தாய் எம்மை தூங்க வைக்க பாடிய பாடலே.

அந்த வயதில் எமக்கு பாட்டின் கருத்து விளங்கி இருக்காத  போதிலும் அதன் இசையையும் அம்மாவின் குரலையுமே இரசித்திருக்கிறோம்.  அந்த இனிமையான சேர்க்கை உலகில் எந்த பிரபல்யமான இசையமைப்பாளர்களால் இசையமைத்தும், அதற்கு எந்த பிரபல்யமான பாடகர்களால் பாடியும்  பெற்றுகொள்ளமுடியாததொன்று.

எம் ஈழத்தில் பொதுவாக பாடப்படும் ஒரு தாலாட்டு பாடலை இங்கு நோக்குவோம் :

ஆ(யா)ராரோ ஆ(யா)ரிவரோ
ஆ(யா)ரடிச்சு நீயழுதாய் அரிய கண்ணால் நீர் வழிய
அடிச்சாரைச் சொல்லியழு ஆக்கினைகள் பண்ணி வைப்போம்

ஆ(யா)ராரோ ஆ(யா)ரிவரோ
ஆ(யா)ரடிச்சு நீயழுதாய் கண்மணியே கண்ணுறங்கு

கண்ணே யடிச்சாரார் கற்பகத்தைத் தொட்டாரார்
தொட்டாரைச் சொல்லியழு தோள் விலங்கு போட்டு வைப்போம்