யாழினிசை தரும் எம் உயிரோசை ! இனி யாரும் இசை தர ‍இது முதல் மணியோசை !

யாழினிசை தரும் எம் உயிரோசை !

இனி யாரும் இசை தர ‍இது முதல் மணியோசை !


வெள்ளி, 3 ஏப்ரல், 2015

தெட்சணாமூர்த்தி ( Thedchanamoorthy )


யாழ் மண்ணின் கலைச்சிறப்பு மிக்க இணுவில் எனும் ஊரில் விசுவலிங்கம் என்னும் பெயருடைய தவில் வித்துவானுக்கும் அவர் மனைவி இரத்தினாம்பாளுக்கும் புத்திரனாக 1933 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 26 ஆம் நாள் ஞானபண்டிதன் எனும் பெயர் கொண்டு பிறந்தவர் தான் பிற்காலத்தில் தெட்சணாமூர்த்தி எனும் புகழ் பெற்ற தவில் கலைஞர் ஆவார்.

இவர் தனது முதற் குருவாக தன் தந்தையை தெரிவு செய்து கொண்டதுடன் அதன் பின் சகோதரியின் கணவனான கிரிஷ்ணமூர்த்தி என்பவரிடமும் தவில் பயின்றார்.  இவரின் ஏழாவது வயதில் வண்ணார் பண்ணை காமாட்சி சுந்தரம் பிள்ளையிடமும் ஆறு மாதங்கள் வரை பயிற்சி பெற்றார். அவரது சகோதரர்கள் ருத்ராபதி, கோதண்டபாணி ஆகியோர் நாதஸ்வரம் வாசிக்க காமாட்சி சுந்தரம் பிள்ளையுடன் சேர்ந்து இணுவில் மஞ்சத்தடி முருகன் ஆலயத்தில் தெற்கு வீதியில் இவரது அரங்கேற்றம் நடைபெற்றது.

அதன் பின்னர் நாச்சியார் கோயில் ராகவப்பிள்ளை என்னும் வித்துவானுடன் சேர்ந்து கொழும்பில் அவருக்கிணையாகத் தவில் வாசித்துத் தன் திறமையை நிலைநாட்டியதுடன் நின்றுவிடாது தன் பன்னிரண்டாவது வயதில் தென்னிந்தியாவுக்குச் சென்று ராகவப்பிள்ளையிடம் பயிற்சி பெற்று தன்னிகரற்ற மேதையானார். இந்தியாவின் நாதசுர மேதைகள் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், காரைக்குறிச்சி அருணாசலம்,சேக் சின்ன மௌலானா, டி.என். ராஜரத்தினம் பிள்ளை போன்றவர்களுக்கு வாசித்துப் பாராட்டும் பெற்றார். ஈழத்திலும் எம். பஞ்சாபிகேசன், பி.எஸ் ஆறுமுகம் பிள்ளை, என். கே பத்மநாதன் , திருநாவுக்கரசு போன்றோருக்கும் வாசித்த பெருமை அவருக்கு உண்டு. இவரது தவில் வாசிப்பு, யாவரும் வியக்கும் வண்ணமும், நாத சுகமுள்ளதாகவும், லய வேலைப்பாடுகள் நிறைந்ததாகவும் இருந்து வந்தது.

இவருடைய சாதனைகளை பார்ப்போமானால்,

  • இவருக்கு 'தங்கக் கோபுரம்' விருது சென்னையில் கிடைக்கப்பெற்றது. 
  • திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை அவர்களின் நினைவு விழாவில் தங்கத்தாலான தவிற்கேடயம் 1968 இல் வழங்கப்பட்டது. 
  • தவில் வாத்தியத்தில் முதன் முறையாக பதினொரு எண்ணிக்கை கொண்ட கதி ஒன்றை அமைத்து அதற்கு உத்தரகதி எனப் பெயர் வைத்தார்.

இவரது தந்தையார் காலமாக தனது மூத்த தமக்கையார் கணேசு இராஜேஸ்வரி வாழ்ந்த அளவெட்டியிலே சென்று குடியேறினார் தெட்சணாமூர்த்தி. அளவெட்டி தவிற்கலைஞர் செல்லத்துரைப்பிள்ளையின் மகளான மனோன்மணியைத் காதலித்து 1957ஆம் ஆண்டு திருமணம் புரிந்துகொண்டார். இவருக்கு கலாதேவி, உதயசங்கர், ரவிசங்கர், உதயசெல்வி, ஞானசங்கர் என ஐந்து பிள்ளைகளைப் உள்ளனர். இவர்களில் இருவர் தவில் பயின்றார்கள். உதயசங்கர் தந்தை வழியிலேயே தவில் பயின்று தற்பொழுது தவில் வாசிப்பதில் சிறந்து விளங்கி வருபவர். மற்றவர் ஞானசங்கர்.

வாழ்நாளின் பிற்பகுதியை இந்தியாவிலே செலவிட்டதுடன். 1970களில் இலங்கை வந்து 1978 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 13 ஆம் நாளில் காலமானார். அவர் மேல் பொறாமை கொண்ட சிலர் அவருக்கு நச்சு மருந்து கொடுத்து அதனால் அவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார் என்றும் எம்மூரில் கதை உண்டு.