யாழினிசை தரும் எம் உயிரோசை ! இனி யாரும் இசை தர ‍இது முதல் மணியோசை !

யாழினிசை தரும் எம் உயிரோசை !

இனி யாரும் இசை தர ‍இது முதல் மணியோசை !


செவ்வாய், 11 அக்டோபர், 2011

தாலாட்டுப்பாடல்

எம் நாட்டு  புலவர்கள்  பலர், பல  பொருள்களில் அமைந்த  தாலாட்டு பாடல்களை எழுதியிருந்த போதிலும், தாலாட்டு பாடல் என்று சொன்னதும் எமக்கு ஞாபகம் வருவது எமது தாய் எம்மை தூங்க வைக்க பாடிய பாடலே.

அந்த வயதில் எமக்கு பாட்டின் கருத்து விளங்கி இருக்காத  போதிலும் அதன் இசையையும் அம்மாவின் குரலையுமே இரசித்திருக்கிறோம்.  அந்த இனிமையான சேர்க்கை உலகில் எந்த பிரபல்யமான இசையமைப்பாளர்களால் இசையமைத்தும், அதற்கு எந்த பிரபல்யமான பாடகர்களால் பாடியும்  பெற்றுகொள்ளமுடியாததொன்று.

எம் ஈழத்தில் பொதுவாக பாடப்படும் ஒரு தாலாட்டு பாடலை இங்கு நோக்குவோம் :

ஆ(யா)ராரோ ஆ(யா)ரிவரோ
ஆ(யா)ரடிச்சு நீயழுதாய் அரிய கண்ணால் நீர் வழிய
அடிச்சாரைச் சொல்லியழு ஆக்கினைகள் பண்ணி வைப்போம்

ஆ(யா)ராரோ ஆ(யா)ரிவரோ
ஆ(யா)ரடிச்சு நீயழுதாய் கண்மணியே கண்ணுறங்கு

கண்ணே யடிச்சாரார் கற்பகத்தைத் தொட்டாரார்
தொட்டாரைச் சொல்லியழு தோள் விலங்கு போட்டு வைப்போம்
   

வியாழன், 6 அக்டோபர், 2011

ஈழத்து இசை வரலாறு

ஈழத்தில் இன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் இசை என்று சொல்லுகையில், அது இந்தியாவின் கர்நாடக இசையை தவிர வேறொன்றாக இருக்க முடியாது. இந்த கர்நாடக இசை இற்றைக்கு 90 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே ஈழத்தில் பரவியதாக வரலாறு கூறுகின்றது.அக்காலத்துக்கு முன்னர் நாட்டுப்புற பாடல்களில் மட்டுமே இசை பேணப்பட்டு வந்தது. நாட்டுப்புற பாடல்கள் மக்களின் பொழுது போக்கிற்காகவும் கோயில் திருவிழாக்களிலும் வீட்டில் நடைபெரும் வைபவங்களிலும் பாடப்பட்டு வந்தன.

நாட்டுப்புற பாடல்கள் தாலாட்டுப்பாடல், கல்யாணப்பாடல், கப்பற்பாடல், குழந்தைப்பாடல், மருத்துவிச்சி வாழ்த்துப் பாடல், ஒப்பாரிப்பாடல், பள்ளுப்பாடல், குறவஞ்சிப்பாடல், கும்மி, கோலாட்டம், கரகம் மற்றும் காவடிப்பாடல்கள் எனும் வகைகளில் அமையப்பெற்றவையாகவும் அவை கும்மி, சிலம்பாட்டம், கோலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், வேதாள ஆட்டம், பேயாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், வசந்தன், பாவைக்கூத்து, நாட்டுக்கூத்து, வில்லுப்பாட்டு, இசை நாடகம், பொம்மை நடனம், கும்மி நடனம், குறத்தி நடனம், குரவை நடனம், ஏந்தல் நடனம், உருவேறிய நடனம், முகமூடி நடனம் போன்ற நிகழ்வுகளில் பாடப்பெற்றும் வந்தன.

இந்நாட்டுப்புற பாடல்கள் வியப்பு, சினம், கருணை, இழிவு, அமைதி, இன்பம், அச்சம், சிரிப்பு மற்றும் வீரம் ஆகிய நவரசங்களிலும் பாடப்பெற்று வந்தமை அக்காலத்தில் பாடப்பட்ட பாடல்களில் இருந்து தெரியவருகின்றது.